புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவுத் திட்டம்
சமூக வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் கல்வி கற்றலுக்கு பசி இடையூறாக இருத்தல் கூடாது என்பதனை மனதில் கொண்டு அப்போதைய முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் 1.07.1982 அன்று சத்துணவு திட்டம் துவக்கப்பட்டது. பள்ளிக் குழந்தைகள் கல்வியுடன் ஊட்டச்சத்தையும் பெறவேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு பயிற்சி மையங்கள், மதரசாக்கள் மற்றும் மக்தப்களில் பயிலும் துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கும், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும் சூடான மதிய உணவு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் வாயிலாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள்
- ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரித்தல், இடைநிற்றலை குறைத்திடுதல் மற்றும் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி வழங்கிடுதல்.
- ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குழந்தைகளுக்கும் சத்துணவு வழங்குவதன் மூலம் ஊட்டச்சத்து அளித்தல்.
- ஏழ்மையில் உள்ள பின்தங்கிய சமூகத்தைச் சார்ந்த குழந்தைகளை ஊக்கப்படுத்தி தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரியவைத்தல், முறையான கல்வி அளித்தல்.
- வேலைவாய்ப்பினை வழங்குவதன் மூலம் பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைய வழி வகுத்தல்.
சத்துணவுத் திட்டத்தின் வளர்ச்சி நிலைகள்
சத்துணவுத் திட்டம், 1.07.1982 அன்று 2 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 5 வயது முதல் 9 வயதிற்குட்பட்ட ஆரம்பப்பள்ளி பயிலும் குழந்தைகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் துவக்கப்பட்டது. பின்னர் 15.09.1982 அன்று நகர்ப்புற பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டதோடு, 15.09.1984 ஆம் ஆண்டு 10 வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் பயனடையும் வகையில் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- 5 முதல் 9 வயதிற்குட்பட்ட துவக்கப்பள்ளி குழந்தைகள் மற்றும் 10 முதல் 15 வயது வரையிலான உயர் துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும், வாரத்திற்கு 5 நாட்கள் வீதம் ஆண்டிற்கு 210 நாட்கள், பள்ளியிலேயே சூடாக சமைத்த ஊட்டச்சத்து நிறைந்த கலவை சாதம் வழங்கப்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும் சூடாக சமைத்த ஊட்டச்சத்து நிறைந்த கலவை சாதம் வருடத்தில் 312 நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
- 1 முதல் 5ஆம் வகுப்பு வரை துவக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு, நாளொன்றுக்கு 100 கிராமும், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை உயர் துவக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு 150 கிராம் அரிசியும் வழங்கப்படுகிறது.